திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியில் 80 வயது மூதாட்டி ஒருவர் நவம்பர் 16-ஆம் தேதி அதிகாலை 5.45 மணியளவில் இயற்கை உபாதை கழிக்கவும் குளிக்கவும் அருகிலுள்ள ஆற்றுப் பகுதிக்குச் சென்றுள்ளார். ஆள் நடமாட்டம் குறைவாக இருந்த அந்த நேரத்தில் அங்கு வந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர், மூதாட்டியைத் திடீரெனக் கீழே தள்ளி பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி தன்னைக் காப்பாற்றுமாறு சத்தமிட்டதைக் கேட்டு அருகிலிருந்த பெண்ணும் அப்பகுதி மக்களும் அங்கு ஓடி வந்துள்ளனர். பொதுமக்கள் வருவதைக் கண்ட அந்த மர்ம நபர் அச்சத்தில் மூதாட்டியை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடிய நிலையில், மக்கள் மூதாட்டியை மீட்டு காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த முன்னீர்பள்ளம் போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய அந்த 35 வயது மதிக்கத்தக்க மர்ம நபரைப் பிடிக்க அப்பகுதியிலுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
