திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகன் வருண் பாலாஜி, சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள குடியிருப்பு ஒன்றின் 9-வது மாடியில் வசித்துக்கொண்டு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும், திண்டுக்கல்லைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியும் கேளம்பாக்கம் பகுதியில் தங்கி வேலை தேடி வந்தவருமான பர்வீன் என்ற இளம்பெண்ணும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். ஆனால், அண்மைக்காலமாக வருண் பாலாஜி பர்வீனுடன் பேசுவதைத் தவிர்த்து வந்ததுடன், அவரது தொலைபேசி அழைப்புகளையும் ஏற்காமல் இருந்துள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பர்வீன், நேற்று இரவு சோழிங்கநல்லூரில் உள்ள வருண் பாலாஜியின் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார். அங்கு, தனது வீட்டில் தனக்குத் திருமண ஏற்பாடுகள் நடப்பதால் உடனடியாகத் தனது பெற்றோரிடம் வந்து பெண் கேட்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். ஆனால், மத வேறுபாட்டைக் காரணம் காட்டித் தனது குடும்பத்தினர் இந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்க மாட்டார்கள் எனக் கூறி வருண் பாலாஜி திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் மிகுந்த ஆத்திரமடைந்த பர்வீன், வீட்டிலிருந்த நாற்காலியை வெளியே எடுத்துச் சென்று அதன் மீது ஏறி 9-வது மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்துத் தகவலறிந்த செம்மஞ்சேரி காவல்துறையினர், பர்வீனின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காகத் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இளம்பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து வருண் பாலாஜியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
