நாகர்கோவில் கோட்டாறு சந்திப்பு ரயில் நிலையத்தின் யார்டு பகுதியில், கடந்த நவம்பர் 11-ம் தேதி முதல் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டி ஒன்றில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை வழக்கமான துப்புரவுப் பணிகளுக்காக அந்தப் பெட்டிக்குள் சென்ற தூய்மைப் பணியாளர்கள், உள்ளே சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடனடியாக இதுகுறித்து நாகர்கோவில் இருப்புப்பாதை காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர். சடலம் மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டதால், அந்தப் பெண் உயிரிழந்து சுமார் 5 முதல் 7 நாட்கள் ஆகியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர், உடற்கூராய்விற்காக அவரது உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது தற்கொலையா அல்லது வேறு எங்காவது கொலை செய்யப்பட்டு சடலம் இங்கு கொண்டு வந்து வீசப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது; உடற்கூராய்வு அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும்.
