அட என்னங்க இது…? கிராம மக்களை தரையில் அமர வைத்து லத்தியால் மிரட்டிய இன்ஸ்பெக்டர்… சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பிய விவகாரம்…!!

By Devi Ramu on கார்த்திகை 12, 2026

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மந்தித்தோப்பு கிராமம் ராஜகோபால் நகரில் நரிக்குறவர் காலனி அமைந்துள்ளது. அங்கு தீபாவளி தினத்தன்று மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்துள்ளது. இதில் காயமடைந்த மூக்கையா, கணேசன், சரவணன், மாரி ஆகியோர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கோவில்பட்டி மேற்கு போலீசார் இருவரை ஏற்கனவே கைது செய்துள்ளனர்.

   

இந்த மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு சட்டம்-ஒழுங்கைக் கட்டுப்படுத்தவும் விசாரணை நடத்தவும் கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வானமாமலை நேரில் சென்றுள்ளார். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியைத் தூக்கிப் பிடித்தவாறு அவர் விசாரணை நடத்தியதுடன் அவர்களைத் தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

   

இந்தச் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினரிடம் விளக்கம் கேட்டபோது, “இருதரப்புக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர்களின் பாதுகாப்பு கருதியே இன்ஸ்பெக்டர் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாரே தவிர, யாரும் மிரட்டப்படவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.