திமுக சட்டத் துறை இணைச் செயலாளர் பரந்தாமன் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கடுமையாகச் சாடியுள்ளார். தீபாவளிப் பண்டிகை தினத்தை முன்னிட்டுக் கடந்த மூன்று நாட்களில் மட்டும் தமிழகத்தில் 17 கொலைகள் நடந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், முதல்வர் விஜய்யின் நிர்வாகத் திறமையின்மையையே இது காட்டுகிறது என வேதனை தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பரந்தாமன், “கடந்த மூன்று நாட்களாக நாளிதழ்களைப் படித்தீர்களா சிஎம் சார்? மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு விவகாரங்கள் குறித்துப் பேசுவதற்காகத் தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வாலும், தலைமைச் செயலாளர் சாய்குமாரும் உங்களைத் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லையாமே?” என்று சரமாரியான கேள்விகளை எழுப்பினார். சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் முதல்வர், அதிகாரிகளின் தொடர்புக்குக்கூடக் கிடைக்காமல் இருப்பது அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னரே எச்சரித்தது போல, இந்த தீபாவளிப் பண்டிகை நாளில் பட்டாசு சப்தத்தை விடக் கூர்மையான பட்டாக் கத்திகளின் சப்தமே மாநிலம் முழுவதும் அதிகமாகக் கேட்டதாகக் குற்றம்சாட்டினார். பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் அச்சமின்றி நடமாட முடியாத சூழல் நிலவுவது கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், இந்த வன்முறை சம்பவங்கள் குறித்துச் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் எழுந்துள்ள விமர்சனங்களைக் குறிப்பிட்ட பரந்தாமன், “பண்டிகை என்றால் அப்படி இப்படித்தான் இருக்கத்தான் செய்யும்” என ஸ்டாண்ட்-அப் காமெடியன் ராஜ்மோகன் போன்றவர்கள் சாதாரணமாகப் பேசுவதைக் கடுமையாக விமர்சித்தார். 17 உயிரிழப்புகள் நேரிட்ட பிறகும் அதைச் சாதாரண நிகழ்வாகக் கடந்து செல்ல முயல்வது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் வலியுறுத்தினார்.
