அதிர்ச்சி நெட்வொர்க்… பணம் சம்பாதிக்க இப்படியொரு மோசடியா?… கருமுட்டை தான விவகாரத்தில் 5 மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ்…!!

By Gayathri on கார்த்திகை 10, 2026

Spread the love

ஹைதராபாத்தில் உள்ள ஐந்து முன்னணி கருத்தரிப்பு மையங்கள் சட்டவிரோத கருமுட்டை தான மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, சுகாதாரத் துறை அதிகாரிகள் அவற்றுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஏழ்மையான இளம்பெண்களைக் குறிவைத்து, இடைத்தரகர்கள் மூலம் சட்ட விதிமுறைகளை மீறி அடிக்கடி கருமுட்டைகளை எடுக்கும் சட்டவிரோத நெட்வொர்க் செயல்பட்டு வந்தது அண்மையில் வெளிச்சத்திற்கு வந்தது. மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் முறையான பதிவுகள் இன்றி, வணிக நோக்கில் பெண்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இந்த மையங்கள் செயல்பட்டது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் ஒழுங்குமுறை சட்டத்தின் விதிகளை அப்பட்டமாக மீறியுள்ள இந்த மையங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பிற்குள் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்காவிட்டால், அவற்றின் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதோடு குற்றவியல் நடவடிக்கைகளும் பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய மருத்துவர்கள், இடைத்தரகர்கள் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்கள் மீது விரிவான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.