டெல்லியில் பிரபல டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான இளம்பெண் ஒருவரால் இளைஞர் ஒருவர் மிரட்டப்பட்டு பெருந்தொகை பறிக்கப்பட்ட மோசடிச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிடிபி நகர் மெட்ரோ பகுதிக்கு நேரில் சந்திக்க வருமாறு சன்யா என்ற பெயரில் பழகிய நிகிதா அழைத்ததன் பேரில், ஜைத் அகமது அங்கு சென்றுள்ளார். தொடர்ந்து அவரை ஹட்சன் லேன் பகுதியில் அமைந்துள்ள ‘பிளாக் பேந்தர்’ உணவகத்திற்கு அந்த பெண் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மிகச் சாதாரண உணவுகளுக்குக் கூட யாரும் எதிர்பாராத வகையில் சுமார் ரூ.26,000 கட்டணம் வசூலித்து அதிர்ச்சி அளித்துள்ளனர்.
இந்த கட்டணத்தைக் கண்டு திகைத்த ஜைத்தை, உணவகத்தின் உரிமையாளர் ஜாவேத், அவருடன் இருந்த அனுஜ் குமார் மற்றும் சிலர் ஒன்றுசேர்ந்து மிரட்டத் தொடங்கியுள்ளனர். வேறு வழியின்றி அச்சமடைந்த அந்த இளைஞர், தனது தந்தையிடம் அவசரமாகப் பணம் கேட்டுப்பெற்று, நவீன் ராஜ்புத் என்ற பெயரில் இருந்த கியூஆர் குறியீட்டுக்கு அந்தத் தொகையை இணையவழியாகச் செலுத்தியுள்ளார். பணம் கைக்கு வந்ததும் அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், அவரை அங்கு அழைத்து வந்த பெண் தனது செல்போனை உடனடியாக அணைத்துவிட்டு அங்கிருந்து நழுவி மாயமாகியுள்ளார்.
