“ரயில் சிக்னல் கம்பிகளை துண்டித்து அதிர்ச்சி திட்டம்…” ஓடும் ரயிலை நிறுத்தி ஜன்னல் வழியே தங்க நகைகள் கொள்ளை… மஹாலக்ஷ்மி எக்ஸ்பிரஸில் பகீர் சம்பவம்….!!

By Devi Ramu on கார்த்திகை 3, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலத்தில், ரயில் சிக்னல் கம்பிகளைத் துண்டித்து ஓடும் ரயிலை நிறுத்தி, ஜன்னல் வழியாகப் பெண் பயணிகளின் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் இருந்து கோலாப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘மஹாலக்ஷ்மி எக்ஸ்பிரஸ்’ ரயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது. லோனண்ட் மற்றும் சல்பா ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் வந்தபோது, மர்ம நபர்கள் சிலர் ரயில்வே சிக்னல் வயர்களை துண்டித்து ரயிலை கட்டாயமாக நிற்க வைத்துள்ளனர்.

   

ரயில் நின்றதும், முன்பதிவு செய்யப்பட்ட S-1 பெட்டியின் அருகே வந்த கொள்ளையர்கள், ஜன்னல் வழியாகக் கைகளை விட்டு அங்கு உறங்கிக் கொண்டிருந்த இரண்டு பெண் பயணிகளின் கழுத்திலிருந்த தங்க சங்கிலிகளைப் பறித்துள்ளனர். பயணிகள் அலறியடித்துக் கூச்சலிட்டதும் கொள்ளையர்கள் இருளில் தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ரயில்வே காவல்துறையினர், சிக்னல் கம்பிகளைத் துண்டித்து கொள்ளையடித்த மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.