தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், தந்தை ஒருவர் தீவிர மதுபோதையில் தனது 5 வயது பிஞ்சு மகனைக் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தின் போரபண்டா தொழில்துறை பகுதியில் வித்யா சாகர் (36) என்பவர் தனது மனைவி துர்கா மற்றும் 5 வயது மகன் விஜய்யுடன் வசித்து வந்தார். இந்நிலையில், துர்கா சமையல் வேலைக்காக இரவு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அந்தச் சமயத்தில் வீட்டில் தனியாக இருந்த வித்யா சாகர், தீவிர மதுபோதையில் தனது 5 வயது மகன் விஜய்யின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
அதிகாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய தாய் துர்கா, தனது மகன் உயிரற்றுக் கிடப்பதைக் கண்டு கதறி அழுது அலறியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அண்டை வீட்டாரின் தகவலின் பேரில் போரபண்டா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காவல்துறை வருவதை அறிந்து கொலையாளி தந்தை வித்யா சாகர் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பியோடிய தந்தையை வலைவீசித் தேடி வருகின்றனர்.
