உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் பகுதியில் வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி ஒருவரை, இரு இளைஞர்கள் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அச்சிறுமி எதிர்த்துப் போராடியதால் ஆத்திரமடைந்த குற்றவாளிகள், அவரை கொடூரமாகத் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். மறுநாள் காலை அருகில் உள்ள காட்டுப் பகுதியில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நிலையில் அச்சிறுமி மீட்கப்பட்டு, உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இக்கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் ஜகத் மற்றும் ரிஷி என்ற உடன்பிறந்த சகோதரர்கள் என்பது காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அவர்களைப் பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட மோதலில், இருவரின் கால்களிலும் துப்பாக்கியால் சுட்டு போலீஸார் அவர்களைக் கைது செய்தனர். தற்போது குற்றவாளிகள் இருவரும் தீவிரக் கண்காணிப்பில் சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் சிறுமிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
