ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணின் ‘ஜனசேனா’ கட்சியில், 14 ஆண்டுகள் தீவிரமாக உழைத்த நிர்வாகி ஒருவருக்குக் கார்ப்பரேட்டர் சீட் வழங்க ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு ஆந்திர அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
திருப்பதியில் 14 ஆண்டுகளாக வீட்டையும் குடும்பத்தையும் மறந்து ஜனசேனா கட்சி வளர்ச்சிக்கு ஓடி ஓடி உழைத்த உண்மைத் தொண்டர் ஒருவர், நடைபெறவுள்ள தேர்தலில் கார்ப்பரேட்டர் சீட் கேட்டுள்ளார். ஆனால், அவருக்குச் சீட் வழங்காமல் ரூ.50 லட்சம் பணம் கேட்டு நச்சரித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஒரே இரவில் மாற்றுக்கட்சிகளிலிருந்து வந்தவர்கள் பணப் பலத்தால் சீட்டுகளைத் தட்டிச் சென்றுள்ளதாகக் கட்சியின் உண்மையான தொண்டர்கள் சமூக வலைதளங்களில் கண்ணீர் மல்கத் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முன்னர் போலவே தற்போதும் சீட்டுகளை விற்பனை செய்யும் கலாச்சாரமே தொடர்வதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் ஆந்திர சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போலப் பரவி பெரும் காரசார விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
