“எல்லாரும் எம்.ஜி.ஆர், விஜய் ஆகிட முடியாது”…. தனுஷ், சிவகார்த்திகேயன் அரசியல் ஆசைக்கு துரைமுருகன் கொடுத்த மரண அடி….!

By Nanthini on ஐப்பசி 26, 2026

Spread the love

தமிழகத்தில் நடிகர் விஜய் கட்சித் தொடங்கி இரண்டே ஆண்டுகளில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலை, திரையுலகில் உள்ள மற்ற நடிகர்களுக்கும் அரசியல் ஆர்வம் மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக முன்னணி நடிகர்களான தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் அரசியலுக்கு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றி, நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவது மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குவது என அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

   

இந்நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் திமுக பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் அரசியலுக்கு வர ஆயத்தமாவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ஒருவர் இளநீர் கடை வைத்து அது நன்றாக நடந்தால், உடனே மற்றவர்களும் அதேபோல் கடை வைப்பார்கள். அதுபோன்ற ஒரு நிலைதான் இது. ஆனால் இதெல்லாம் நிலைத்து நிற்காது; எல்லாரும் எம்.ஜி.ஆர் அல்லது ஜோசப் விஜய் போல வெற்றி பெற்று விட முடியாது” என்று விமர்சித்தார்.

   

தொடர்ந்து தவெக அரசு மற்றும் தற்போதைய ஆட்சி நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்து அவர் பேசுகையில், “பருவமழை காலத்தில் எவ்வளவு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும், கட்டுக்கடங்காத மழை பெய்தால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அதைச் சமாளிக்கும் திறமையான நிர்வாகம் இருக்க வேண்டும். தற்போதைய ஆட்சியில் எதுவுமே வெளிப்படைத்தன்மையோடு இல்லை; எல்லாமே மறைமுகமாக ஒரு மர்ம அரசாங்கமாகவே செயல்பட்டு வருகிறது” என்று குற்றம் சாட்டினார்.

 

மேலும் மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து பேசிய துரைமுருகன், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுப்போய்விட்டது. ஆளும்கட்சியினர் மீதுள்ள பயம் போய்விட்டது; ‘நாம் தான் ஆளும் கட்சி, நம்மை யாரும் ஒன்றும் செய்ய முடியாது’ என்ற மிதப்பில் செயல்படுகிறார்கள். ஆளும்கட்சியினரே அதிகளவில் போதைப்பொருட்களை வைத்திருப்பதாக செய்திகளில் பார்க்க முடிகிறது. காவல்துறையின் அணுகுமுறை சரியாக உள்ளதா என்பதே தெரியவில்லை. சட்டம் ஒழுங்கு சீர்கேடு பற்றி இந்த அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை” என்றும் கடுமையாகத் சாடினார்.