மதுரை மாவட்டம், மேலூர் அருகிலுள்ள தனியாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வெளிநாட்டு தொழிலாளி பெரிய கருப்பன் – சத்யா தம்பதியின் 7 வயது மகன் முத்துவேல், அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று (அக் 25) பள்ளிக்கு விடுமுறை என்பதால், அவர் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரெனக் காணாமல் போனார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, அப்பகுதியிலிருந்த முழுமையாகச் சிதலமடைந்து பாழடைந்த நிலையில் இருந்த ஓட்டு வீட்டிற்குள் முத்துவேல் தலைகுப்புற இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தினர். சிறுவன் கொலை செய்யப்பட்டாரா அல்லது அவரது இறப்புக்கு வேறு என்ன காரணம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன், அப்பகுதியில் பாதுகாப்புக்காகப் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
