இந்தியாவில் சாலை விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், கார்களில் மேம்பட்ட தானியங்கி அவசரகால பிரேக்கிங் (AEB) அமைப்பைக் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, 2030-ம் ஆண்டு அக்டோபர் முதல் அறிமுகப்படுத்தப்படும் அனைத்து புதிய கார் மாடல்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும். அதேசமயம், அதற்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து உற்பத்தியில் இருக்கும் கார்களுக்கு 2032-ம் ஆண்டு அக்டோபர் முதல் இந்த வசதி கட்டாயமாக்கப்படவுள்ளது. இந்தத் தொழில்நுட்பமானது காரின் முன்னால் உள்ள தடைகளைக் கண்டறிந்து ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுத்து, அவசியமான கட்டத்தில் தானாகவே பிரேக் செய்து விபத்தைத் தவிர்க்க உதவும்.
தனிப்பட்ட கார்களைத் தாண்டி, வணிக ரீதியிலான டாக்சிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தானியங்கி ஸ்டீயரிங் கட்டுப்பாடு, அவசரகால பாதை மாறுதலைத் தடுக்கும் அமைப்பு மற்றும் ஓட்டுநரின் தூக்கக் கலக்கம் அல்லது கவனக்குறைவைக் கண்டறிந்து எச்சரிக்கும் அதிநவீன வசதிகள் டாக்சிகளுக்குக் கட்டாயமாக்கப்பட உள்ளன. இதன் மூலம் பயணிகள் மற்றும் ஓட்டுநர்களின் பாதுகாப்பு மேலும் உறுதி செய்யப்படும்.
இதேபோன்று, லாரி மற்றும் பேருந்துகள் போன்ற கனரக வாகனங்களுக்கும் பாதுகாப்புக் விதிமுறைகள் படிப்படியாக அமல்படுத்தப்படவுள்ளன. இதில் தானியங்கி அவசரகால பிரேக்கிங், பிளைண்ட் ஸ்பாட் கண்டறிதல், ஓட்டுநர் சோர்வு கண்காணிப்பு மற்றும் பாதை எச்சரிக்கை தொழில்நுட்பங்கள் அடங்கும். நீண்ட நேரம் வாகனம் ஓட்டுவோரின் சோர்வைக் குறைத்து விபத்துகளைத் தடுக்கும் இந்த மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான வரைவு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
