பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியது தொடர்பான லஞ்சப் புகாரில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அவரது தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு (CCP) காவல்துறையினர் அண்மையில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். சென்னை தி.நகரில் உள்ள தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திமுக பிரமுகர் பி.டி. அரசகுமார் கடந்த ஜூன் 27-ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் போன்ற அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் வசூலித்து மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் தொடர்ச்சியாக, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அவரது உதவியாளர் வாளாடி கார்த்திக் ஆகியோருக்குச் சொந்தமான 8 இடங்களில் 20-க்கும் மேற்பட்ட மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 8 மணி நேரம் நீடித்த இந்த சோதனையின் முடிவில் வங்கி பரிவர்த்தனை ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க்குகள், லேப்டாப்கள், காசோலைகள் மற்றும் 18 செல்போன்கள் உள்ளிட்ட பல முக்கியமான தடயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பினர்.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, அன்பில் மகேஷ் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தற்போது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. இதற்கிடையே, இவ்வழக்கில் ஒரு புதிய வீடியோ ஆதாரம் வெளியாகி இருப்பது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ ஆதாரத்தின்படி, பல்வேறு நபர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கைமாறியதுடன், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் பெருமளவில் பணம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வெளியான புதிய வீடியோ மற்றும் இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், இந்த முறைகேட்டின் மொத்த மதிப்பு சுமார் 420 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்று குற்றப்பிரிவு போலீசார் சந்தேகிக்கின்றனர். குறிப்பாக முத்துக்குமாருக்கு 70 கோடி, அரசு குமாருக்கு 50 கோடி மற்றும் அன்பில் மகேஷ் வீட்டில் 300 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இந்த முறைகேட்டில் முன்னாள் அமைச்சரின் மனைவிக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
முக்கியமான ஆவணங்களும் புதிய வீடியோ ஆதாரங்களும் சிக்கி இருப்பதால், இந்த வழக்கில் கூடுதல் உண்மைகளைக் கண்டறிய அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் மனைவிக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் மீது விசாரணை வளையம் இறுகியுள்ள நிலையில், அவரது மனைவிக்கும் சம்மன் அனுப்பப்படலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரத்திலும் பொதுவெளியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
