வீரபாண்டிய கட்டபொம்மனின் 227-வது நினைவு நாளை முன்னிட்டு, கயத்தாறில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, சண்முகநாதன் மற்றும் செல்லப்பாண்டியன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ராஜேந்திர பாலாஜி, அதிமுகவின் அரசியல் நிலைப்பாடு மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
கட்சியில் எடப்பாடி பழனிசாமியின் அதிகார வரம்பு குறித்துப் பேசிய அவர், அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி மட்டுமே திகழ்கிறார் என்றும், அவர் எப்போது நினைக்கிறாரோ அப்போதுதான் பொதுக்குழு கூட்டப்படும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், வெளியில் இருந்து யாரும் அவரை நிர்ப்பந்திக்கவோ அல்லது கட்டளையிடவோ முடியாது என்றும், அவ்வாறு கட்சியைப் கைப்பற்ற நினைப்பவர்களின் எண்ணம் கானல் நீராகத்தான் முடியும் என்றும் எச்சரித்தார்.
இடைத்தேர்தல் முடிவுகள் மற்றும் தேர்தல் தோல்விகள் குறித்துப் பேசிய ராஜேந்திர பாலாஜி, இடைத்தேர்தல் தோல்விகளை மட்டும் வைத்துக் கணக்குப் போட்டால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்றார். மேலும், த.வெ.க.வுக்குச் சென்றவர்கள் தற்போது அங்கு மகிழ்ச்சியாக இல்லை என்றும், அவர்கள் மீண்டும் அதிமுகவுக்குத் திரும்பி வரக் காலத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவைப் போல, இன்று அதிமுகவின் முகமாக எடப்பாடி பழனிசாமிதான் விளங்குகிறார் என்று அவர் புகழாரம் சூட்டினார். பட்டிதொட்டியெங்கும் உள்ள கிராமங்களில்கூட இரட்டை இலை என்றாலே எடப்பாடி பழனிசாமியின் பெயர்தான் நினைவுக்கு வரும் அளவுக்கு மக்கள் மத்தியில் அவர் பெயர் பரவியுள்ளது என்றும், அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஏ.கே.47 துப்பாக்கியைப் போலக் காவலிருந்து அவரைப் பாதுகாப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.
இறுதியாக, அதிமுகவைச் குறை கூறுபவர்களும், கட்சி மூன்றாவது இடத்தில் இருப்பதாகத் தெரிவிப்பவர்களும் விரைவில் வாய்பொத்தி நிற்கக்கூடிய காலம் வரும் என்று ராஜேந்திர பாலாஜி எச்சரித்தார். எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுக தற்போது எழுச்சி பெற்று வரும் இயக்கமாக மாறி வருவதாகவும், எதிர்காலத்தில் மாபெரும் வெற்றிகளைக் குவிப்பதற்கான பாதையில் கட்சி உறுதியுடன் பயணிக்கிறது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
