தலைமைச் செயலகத்திற்கே ‘கரண்ட்’ இல்லை…. அமைச்சர்கள் அறைகள் இருளில் மூழ்கி அதிர்ச்சி…. என்ன நடக்கிறது தமிழகத்தில்….?

By Nanthini on ஐப்பசி 12, 2026

Spread the love

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு பொதுமக்களைப் பாடாய்ப்படுத்தி வரும் நிலையில், தற்போது சென்னை தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பருவநிலை மாற்றம் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி சரிவைக் காரணம்காட்டி மின்வாரியம் டெண்டர்கள் மூலம் மின்சாரம் கொள்முதல் செய்ய முயற்சித்து வந்தாலும், நிலவும் மின்தடை மக்களின் அன்றாட வாழ்க்கையை வெகுவாகப் பாதித்து வருகிறது.

பொதுமக்களும் உழைக்கும் வர்க்கத்தினரும் அவதிப்பட்டு வந்த இந்த நிலை, தற்போது அமைச்சர்களின் அறைகளையும் விட்டு வைக்கவில்லை. இன்று தலைமைச் செயலகத்தில் ஏற்பட்ட திடீர் மின்தடையால், அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரின் அறைகள் முழுமையாக இருளில் மூழ்கின. அவர்கள் இருந்த ஒட்டுமொத்த தளமும் மின்சாரமின்றித் தவித்ததால், அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

   

முன்னதாக, தாராபுரம், வேலூர், தூத்துக்குடி மற்றும் மதுரை போன்ற பல இடங்களில் நடைபெற்ற கூட்டங்களிலும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்ற நிகழ்வுகளிலும் இதுபோன்று திடீர் மின்வெட்டுகள் ஏற்பட்டுப் பெரும் சர்ச்சையைக் கிளப்பின. அந்த வேளைகளில் ஆளும் தரப்பு இதனை வெறும் தொழில்நுட்பக் கோளாறாகவோ அல்லது சொற்ப விநாடித் தடையாகவோ விளக்கமளித்து வந்த நிலையில், தற்போது நாட்டின் முக்கிய நிர்வாக மையமான தலைமைச் செயலகத்திலேயே மின்சாரம் தடைபட்டுள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

   

இதுகுறித்து மின்வாரிய ஊழியர்கள் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில், மின்வெட்டு பிரச்சினைக்கு அரசு உடனடியாக நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது. தலைமைச் செயலகத்திலேயே மின்சாரம் தடைபட்டுள்ள இந்தச் சம்பவம், தமிழகத்தின் ஒட்டுமொத்த மின்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புப் பராமரிப்பு குறித்த பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.