இடைத்தேர்தல் தோல்வி எதிரொலியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக மீண்டும் உட்கட்சி பூசல் வெடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே கட்சிக்குள் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்த சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோரின் தலைமையில் இன்று முக்கியக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு EPS-க்கு ஆதரவான மற்றும் அதிருப்தி தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த அரசியல் நகர்வு அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியை முழுமையாகக் கைப்பற்ற மொத்தமுள்ள 41 எம்.எல்.ஏ-க்களில் குறைந்தபட்சம் 28 பேரின் ஆதரவைத் திரட்ட வேண்டும் என்ற கணக்கோடு இந்த அதிருப்தி அணி காய் நகர்த்தி வருவதாகத் தெரிகிறது. இந்தக் கூட்டத்தின் முடிவுகளின் அடிப்படையில், தங்களது பலத்தை நிரூபிக்கவும் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகளுக்காகவும் டெல்லி சென்று தேசிய தலைவர்களைச் சந்திக்கவும் இந்தத் தரப்பு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த அதிருப்தி அரசியல் போக்கு எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு மேலும் புதிய சிக்கல்களை உருவாக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
