திருநெல்வேலி டவுன் பகுதியைச் சேர்ந்த 17 வயது பிளஸ்-2 பள்ளி மாணவி, பேட்டை மலையாள மேடு பகுதியில் தனது வகுப்புத் தோழனுடன் பேசிக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் இருவரையும் மிரட்டித் தாக்கியுள்ளது. தொடர்ந்து அந்த மாணவியை அச்சுறுத்திக் கூட்டுப் பாலியல் தொல்லை கொடுத்த அக்கும்பல், மாணவி மயக்கமடைந்த நிலையில் அவர் அணிந்திருந்த கம்மல், தங்கச் சங்கிலி மற்றும் செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளது.
மேலும் மாணவியின் அந்தரங்கப் படங்களைச் செல்போனில் எடுத்துக்கொண்டு, வெளியே சொன்னால் இணையத்தில் பரப்பி விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். அச்சத்தால் பள்ளிக்குச் செல்லாமல் முடங்கிய மாணவி குறித்து நெல்லை மாநகரக் காவல் ஆணையர் தேஷ்முக் சஞ்சய் சேகர் உத்தரவின்பேரில் மகளிர் போலிஸார் ரகசிய விசாரணை நடத்தினர். இதில் ஏற்கனவே 3 கொலை வழக்குகளில் தொடர்புடைய தென் பத்து சுரேஷ் (27) மற்றும் 17, 14 வயதுடைய சிறுவர்கள் இதில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சுரேஷ் மற்றும் 17 வயது சிறுவனைப் போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
