118 பவுன் கொள்ளை போன அதிர்ச்சியே இன்னும் அடங்கல.. அதுக்குள்ள யூடியூபர் மதுமிதா மீது அடுத்தப் புகார்…. புதிய ட்விஸ்ட்டால் பரபரப்பு….!

By Nanthini on ஐப்பசி 10, 2026

Spread the love

யூடியூபர் மதுமிதா வீட்டில் நடந்த 118 பவுன் நகை கொள்ளை விவகாரம் சோஷியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் மீதே ஒரு திருட்டுப் புகார் எழுந்துள்ளது பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த மதுமிதா, தனது வீட்டில் அதிகளவில் நகைகள் இருப்பதை ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் காட்டியதே கொள்ளைக்குக் காரணமாக அமைந்தது. இந்த வழக்கில் போலீசார் துரிதமாகச் செயல்பட்டு 4 பேரைக் கைது செய்து 98 பவுன் நகைகளை மீட்டனர்.

இந்தச் சூழலில்தான், நெல்லையைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் பேச்சிமுத்து என்பவர் மதுமிதா மீது புதிய புகார் ஒன்றை அளித்தார். கடந்த 2022-ஆம் ஆண்டு நெல்லையில் தனக்கு அறிமுகமான மதுமிதா, காரில் மசாஜ் செய்வதாகக் கூறி ஏமாற்றித் தனது 5 பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றுவிட்டதாக அவர் அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார். இந்தச் புகாரின் அடிப்படையில் ராஜாக்கமங்கலம் போலீசார் ஜீரோ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து, வழக்கினை நெல்லை பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு மாற்றியுள்ளனர்.

   

வழக்கு மாற்றப்பட்டு சில நாட்கள் ஆன நிலையில், புதிய எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வதில் தாமதம் நிலவுவதாகவும், புகார்தாரரான பேச்சிமுத்துவிடம் விசாரணை நடத்திய பின்னரே முறையான வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மதுமிதா மீதான இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள மாவட்ட எஸ்பி விஸ்வேஷ் பா. சாஸ்திரி, இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் மதுமிதா கண்டிப்பாகக் கைது செய்யப்படுவார் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

   

ஒருபுறம் தனது வீட்டில் நடந்த கொள்ளையால் இன்ஸ்டாகிராம் மற்றும் சோஷியல் மீடியாவில் வைரலான மதுமிதா, மறுபுறம் இப்போது தன் மீது சுமத்தப்பட்டுள்ள 5 பவுன் நகை திருட்டுப் புகாரால் மீண்டும் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். 2022-ஆம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் மற்றும் நெல்லை போலீசாரின் தீவிர விசாரணைக்குப் பின்னரே, இந்த விவகாரத்தில் உண்மை என்னவென்பதும் மதுமிதா கைதாகிறாரா என்பதும் முழுமையாகத் தெரியவரும்.