தெலங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டம் ஜீடிமெட்லா காவல் எல்லைக்குட்பட்ட சிந்தல் கஸ்டா பஜாரில் உள்ள ‘விஷ்ணு ஜூவல்லரி’ நகைக்கடைக்கு தாய் ஒருவர் தனது 2 வயது பெண் குழந்தை மிஷாவுடன் தங்கம் வாங்கச் சென்றுள்ளார். அப்போது கடையில் இருந்த குழந்தை, நகை சுத்திகரிப்புக்காக அங்கே வைக்கப்பட்டிருந்த கொடூர விஷமான சயனைடு ரசாயனத்தை தவறுதலாக எடுத்து குடித்துள்ளது.
இதில் குழந்தை திடீரென மயங்கி விழுந்ததை அடுத்து, உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பொதுமக்களும் குழந்தைகளும் நடமாடும் இடத்தில் கொடூர விஷமான சயனைடை அலட்சியமாக வைத்திருந்த நகைக்கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், நீதி வழங்கக் கோரியும் குழந்தையின் உறவினர்கள் கடை முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
