“மிரட்டல்கள் வந்தது உண்மைதான்”… கடைசியாக பதிவிட்ட வீடியோ… தப்பிய மர்ம நபர்கள்… மேக்கப் கலைஞர் கொலையில் உடையும் திடுக்கிடும் மர்மங்கள்…!!

By Gayathri on ஐப்பசி 4, 2026

Spread the love

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிரபல சமூக வலைத்தள இன்ஃப்ளூயன்சரும், ஒப்பனை கலைஞருமான மேட் சாந்து சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எல்.ஜி.பி.டி.க்யூ சமூகத்தினருக்கான விழிப்புணர்வு மற்றும் ஒப்பனை கலை தொடர்பான கருத்துகளை இணையத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்த இவர், மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் பல லட்சம் பின்தொடர்பாளர்களைக் கொண்ட இவரது மரணம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பயங்கர சம்பவம் சனிக்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் அமிர்தசரஸின் லோஹர்கா சாலைப் பகுதியில் நிகழ்ந்துள்ளது. தனது காரை வாட்டர் வாஷ் செய்ய கொடுத்துவிட்டு, அதனை மீண்டும் எடுக்க கடைக்குச் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் மேட் சாந்துவை மிக அருகில் வைத்து இரண்டு முதல் மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்; ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

   

மதுசூதன் என்ற இயற்பெயர் கொண்ட மேட் சாந்து, தனது வீடியோக்கள், கருத்துகள் மற்றும் வித்தியாசமான ஆடைகள் காரணமாக சில தரப்பினரிடம் இருந்து சமீப காலமாக கடுமையான விமர்சனங்களையும் மிரட்டல்களையும் சந்தித்து வந்துள்ளார். இந்த கொலைக்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், குடும்பத்தினரின் புகாரின் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகள் குறித்து சில முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.