தருமபுரி மாவட்டம் அரூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் மீது தின்னர் ஊற்றித் தீ வைத்துக் கொலை செய்ய முயன்ற கணவரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரூர் அடுத்த சங்கிலிவாடி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான தனகோட்டி (51) என்பவருக்கும், அவரது மனைவி தீத்தி (48) என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தனகோட்டி தனது செல்போனில் வேறு ஒரு பெண்ணுடன் மணிக்கணக்கில் பேசி வந்ததை அடுத்து, அவருக்குக் கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகித்த தீத்தி அதனைக் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே தினசரி வாக்குவாதம் முற்றி வந்த நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வழக்கம்போல அவர்களுக்குள் மீண்டும் கடுமையான தகராறு மூண்ட நிலையில், ஆத்திரமடைந்த தனகோட்டி வீட்டில் இருந்த தின்னரை எடுத்து மனைவி தீத்தியின் மீது ஊற்றித் தீ வைத்துள்ளார். உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததில் தீத்தி அலறவே, சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து அவரை மீட்டனர். அரூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வரும் தீத்தி, தனது கணவர் தனகோட்டிதான் தன் மீது தின்னர் ஊற்றித் தீ வைத்தார் என வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த அரூர் காவல்துறையினர், தப்பியோட முயன்ற தனகோட்டியைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
