“மாமியார், நாத்தனார் ஆடிய விசித்திர நாடகம்”…. பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த கொடூரம்…. புதுக்கோட்டை கர்ப்பிணி மரணத்தில் அம்பலமான பகீர் உண்மை….!

By Nanthini on ஐப்பசி 3, 2026

Spread the love

புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் பாண்டித்துரையின் மனைவி சந்தியா (21), ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அண்மையில் விசித்திரமான முறையில் உயிரிழந்தார். காலை உணவாக பிரெட் சாப்பிட்டபோது விக்கல் ஏற்பட்டு மூச்சுத்திணறல் உண்டானதால் சந்தியா மயங்கி விழுந்ததாகக் கூறி, அவரது குடும்பத்தினர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். ஆரம்பத்தில் இதைச் சந்தேக மரணமாகப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினருக்கு, பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் பேரதிர்ச்சி காத்திருந்தது. சந்தியாவின் மரணம் இயற்கையானது அல்ல; அவர் மூச்சுத் திணறடிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது அதில் உறுதியானது.

இதையடுத்து, இந்த வழக்கைக் கொலை வழக்காக மாற்றிய போலீசார், சந்தியாவின் மாமியார் பானுமதி மற்றும் நாத்தனார்களான பாண்டி மீனா, பொற்கொடி உள்ளிட்ட உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கணவர்களைப் பிரிந்து வாழும் நாத்தானார்கள் இருவருக்கும் இருந்த திருமணத்தை மீறிய உறவு குறித்துச் சந்தியாவுக்குத் தெரியவந்ததும், அதுபற்றி அவர் தனது கணவரிடம் கூறியதும் வெளிச்சத்திற்கு வந்தது. தன் மனைவியின் பேச்சைக் கேட்டுப் பாண்டித்துரை தனது சகோதரிகளைக் கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரமும், தங்களது ரகசியம் ஊருக்கு அம்பலமாகிவிடுமோ என்ற பயமுமே சந்தியாவை வழியிலிருந்து அகற்ற அவர்கள் திட்டமிட்டதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

   

பாண்டித்துரை வேலை விஷயமாக ஈரோடு சென்றிருந்த சமயத்தைப் பார்த்து, நாத்தனார்களான பாண்டி மீனா, பொற்கொடி, மாமியார் பானுமதி மற்றும் உறவினர்கள் கனிமொழி, செல்வி, கார்த்தி ஆகிய ஆறு பேரும் ஒன்றிணைந்து இக்கொடூரச் செயலை அரங்கேற்றியுள்ளனர். அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த கர்ப்பிணி என்றும் பாராமல் சந்தியாவைத் துப்பட்டாவால் கழுத்தை நெரித்தும், தலையணையால் முகத்தை அழுத்தியும் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். பின்னர், இக்கொலையைச் சாதாரண இயற்கை மரணமாகக் காட்டத் திட்டமிட்டு, சந்தியாவின் வாயிலும் மூக்கிலும் பிரெட்டைத் திணித்துப் பாலை ஊற்றி, பிரெட் சாப்பிட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தது போலப் நாடகமாடியுள்ளனர்.

   

மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினரையே நம்ப வைக்கும் வகையில் அவர்கள் ஆடிய நாடகம், மருத்துவமனையின் துல்லியமான பிரேத பரிசோதனை அறிக்கையால் இறுதியில் அம்பலமானது. உண்மை வெளிவந்ததைத் தொடர்ந்து, கொலையில் தொடர்புடைய மாமியார் பானுமதி, நாத்தனார்கள் பாண்டி மீனா, பொற்கொடி உட்படச் சதியில் ஈடுபட்ட 6 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருமணத்தை மீறிய உறவை மறைப்பதற்காகவும், உண்மை அறிந்தவரை முடக்குவதற்காகவும் சொந்தக் குடும்பத்தினரே ஒரு கர்ப்பிணிப் பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்த இச்சம்பவம் புதுக்கோட்டை மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.