தமிழகத்தில் நிலுவையில் உள்ள பயிர்க்கடன்களை வசூலிக்கும் பணிகள் முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, விதிகளை மீறி விவசாயிகள் யாரையேனும் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் கடனைத் திரும்பக் கேட்கத் தொடர்பு கொண்டால், உடனடியாக 9884000845 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று எச்சரித்துள்ளது.
தொலைபேசி வாயிலாக சில விவசாயிகளிடம் நிலுவைக் கடன்களை வசூலிக்க முயல்வதாகத் தொடர்ச்சியாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயிர்க்கடன் திருப்பிச் செலுத்துவது குறித்துக் கூட்டுறவுச் சங்க அதிகாரிகளோ அல்லது ஊழியர்களோ விவசாயிகளைத் தேவையின்றி வற்புறுத்தக் கூடாது என்றும், இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என்றும் அரசுத் தரப்பில் உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
