லூதியானாவின் பகதூர்கே சாலையில் அதிவேகமாக வந்த டாடோ டியாகோ மின்சாரக் கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து பல வாகனங்கள் மீது மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஒரு மிதிவண்டி, ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ஒரு இ-ரிக்ஷா ஆகியவை பலத்த சேதமடைந்தன. கார் வேகமாக மோதியதில் இருசக்கர வாகன ஓட்டி காற்றில் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார். இந்த ஒட்டுமொத்தக் கொடூரச் சம்பவமும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவி வருகிறது.
இந்த விபத்தில் காயமடைந்த ஐந்து பேர் உடனடியாக சிகிச்சைக்காக சிவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் ஒருவருக்கு தலையில் பலத்த காயமும் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. விபத்து நடந்த உடனே ஓட்டுநர் தப்பியோட முயன்ற நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்று பிடித்தனர். பின்னர்ப் பிடிபட்ட ஓட்டுநரை சலேம் தாப்ரி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
https://twitter.com/HateDetectors/status/2103767686006391015/video/1
முதற்கட்ட தகவல்களின்படி, கார் ஓட்டுநர் மதுபோதையில் இருந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. காவல்துறையினர் ஓட்டுநரைக் கைது செய்து, விபத்துக்கான முழுமையான காரணங்கள் குறித்தும், விபத்தின் போது ஓட்டுநரின் நிலை என்ன என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
