ஒடிசாவைச் சேர்ந்த அனுசூயா (28) மற்றும் சாகர் சந்திர ராவத் (32) இருவரும் பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு பெங்களூருவில் வசித்து வந்தனர். ஹோட்டலில் சமையல் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்த சாகரிடம், சம்பளம் மற்றும் குடும்பச் செலவு குறித்து ஆகஸ்ட் 11 அன்று அனுசூயா தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாகர், அனுசூயாவைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.
கொலைக்குப் பின் 3 நாட்கள் உடலை வீட்டிலேயே வைத்திருந்த சாகர், பின்னர் அதை மெத்தையில் சுற்றி, சம்பிகேஹள்ளி எம்.எஸ். நகரில் உள்ள ஒரு காலி மனையில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். காலி மனைகளைச் சுத்தமாக வைக்க வேண்டும் என்ற மாநகராட்சி உத்தரவின்படி, நிலத்தின் உரிமையாளர் ஆட்களை வைத்துச் சுத்தம் செய்தபோது அழுகிய நிலையில் இருந்த உடல் கண்டெடுக்கப்பட்டது.
உடல் மிகவும் சிதைந்திருந்ததால், அதில் இருந்த ஆடையின் குறிச்சொல்லை கொண்டு போலிஸார் ஆய்வு செய்து அனுசூயாவை அடையாளம் கண்டனர். விசாரணையில் சாகர் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து சம்பிகேஹள்ளி போலிஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
