சென்னையின் தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவர், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், அவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
போலிஸார் உடனடியாகக் குற்றவாளியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலிஸ் குழுவினர் வழக்கு தொடர்பான தீவிர விசாரணை நடத்தி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றவாளி மீதான குற்றம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.200 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் மேலும் இரண்டு வாரங்கள் கூடுதல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தந்த காவல் ஆய்வாளர் மற்றும் போலிஸ் குழுவினரைப் மூத்த காவல் அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
