கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கண்ணநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அபிலாஷ் (21). இவருடைய உறவினரான வளவஞ்சால் பகுதியைச் சேர்ந்த விஸ்மையா (15), 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளிக்கூடத்திற்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற விஸ்மையாவும், அபிலாஷும் திடீரென மாயமாகினர். உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், கண்ணநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு போலிஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு 1:45 மணியளவில் அங்கமாலி ரயில் நிலையத்தில் திருச்சூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி, ஒரு சிறுமியும் வாலிபரும் சடலமாகச் சிதறிக் கிடந்தனர். தகவலறிந்து வந்த அங்கமாலி போலிஸார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் உடல்களைக் கைப்பற்றி நடத்திய விசாரணையில், இறந்தது மாயமான அபிலாஷ் மற்றும் விஸ்மையா என்பது உறுதியானது. தகவல் அறிந்து வந்த பெற்றோர் இருவரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர். மாயமான இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது விபத்தில் அடிபட்டு இறந்தார்களா என்ற கோணத்தில் போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
