மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த 46 வயது தொழிலதிபர் ஒருவர், தனது மனைவியிடம் தொழில் விஷயமாக மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்குச் செல்வதாகக் கூறிவிட்டுப் புறப்பட்டுள்ளார். ஆனால், அவர் தனியாகச் செல்லாமல் தனது பெண் தோழி ஒருவருடன் செப்டம்பர் 14-ஆம் தேதி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது குடியேற்றச் சோதனையின் போது, அந்தப் பெண் வைத்திருந்தது தொலைந்துபோன பழைய பாஸ்போர்ட் என்பது தெரியவந்ததால் அதிகாரிகளால் பயணம் ரத்து செய்யப்பட்டது.
தோழியுடன் வெளிநாடு செல்ல முயன்ற உண்மை மனைவிக்குத் தெரிந்துவிடும் என்ற பயத்தில், அந்தத் தொழிலதிபர் விமான நிலைய லேண்ட்லைனில் இருந்து மனைவிக்குத் தொடர்பு கொண்டுள்ளார். “குடியேற்றச் சோதனையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, அதிகாரிகள் எனது செல்போனைப் பறித்துக் கொண்டனர்” என்று பொய் கூறிவிட்டு, போனை ஆஃப் செய்துவிட்டுத் தோழியுடன் மும்பை சிஎஸ்எம்டி ரயில் நிலையத்திற்குத் தப்பிச் சென்று தலைமறைவானார். கணவரின் நிலைமை தெரியாமல் பதறிய மனைவி, தனது கணவரைக் யாரோ கடத்திவிட்டதாகக் கருதி போலிஸில் புகார் அளித்தார்.
மனைவியின் புகாரின் பேரில் போலிஸார் கடத்தல் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், பயந்துபோன தொழிலதிபர் நேராகக் காவல் நிலையத்திற்கு வந்து தானாகச் சரணடைந்தார். விசாரணையில், மனைவியிடம் கள்ளத் தொடர்பை மறைப்பதற்காகவே இந்தக் கடத்தல் நாடகத்தை ஆடியதாக ஒப்புக்கொண்டார். உண்மையிலேயே கடத்தல் சம்பவம் எதுவும் நடக்காததால், இந்த வழக்கை முடித்து வைக்க ‘C Summary’ அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய போலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
