திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான 7,515 சதுர அடி நிலத்தை மோசடியாகப் பத்திரப்பதிவு செய்ததாக, அப்பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் ராம்குமார் உட்பட 6 பேர் மீது காவலத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கோயில் நிர்வாகத்தின் இணை ஆணையர் சிவராமகுமார் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இந்த நிலம் கைமாற்றப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் குற்றம் சாட்டியதுடன், அந்த இடத்தில் தேர்தல் பரப்புரைக்காக திமுக அலுவலகம் செயல்பட்டு வருவதாகவும், இதற்கான ஆவணங்களைச் செய்தியாளர்களிடம் வெளியிட்டுத் தெரிவித்தார்.
ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான மொத்தம் 5 ஏக்கர் 87 சென்ட் நிலத்தில் ஒரு பகுதியில் அரசு மருத்துவமனை இயங்கி வரும் நிலையில், சர்வே எண் 762-ன் கீழ் உள்ள 7,515 சதுர அடி நிலம் கடந்த 2022-ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த மோசடி நடவடிக்கைகளில் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் பிற அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று அமைச்சர் ரமேஷ் சந்தேகம் எழுப்பியுள்ளார். இச்சம்பவம் ஆன்மீக அன்பர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை திமுக பிரமுகர் ராம்குமார் முற்றிலுமாக மறுத்துள்ளார். இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குறிப்பிட்ட இந்தச் சொத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்கில் உள்ளது. வழக்கு விசாரணையில் இருக்கும்போதே காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது எப்படி என்று தெரியவில்லை. இது சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் மறைந்த வேங்கட வரதாச்சாரியார் என்பவருக்குச் சொந்தமான சட்டப்பூர்வமான சொத்து. அவரின் 4 வாரிசுகளிடம் இருந்து நாங்கள் முறைப்படி பத்திரப்பதிவு செய்துள்ளோம்; அதற்கான அனைத்து ஆவணங்களும் எங்களிடம் உள்ளன” என விளக்கமளித்தார்.
மேலும் தொடர்ந்த ராம்குமார், “2013-ஆம் ஆண்டு முதலே இந்தச் சொத்து என்னிடம் உள்ளது, 2022-இல் தான் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. அப்போது அறநிலையத்துறை இணை ஆணையர் வழங்கிய தடையில்லா சான்றில் (NOC) குறிப்பிட்டுள்ள எண், பத்திரப்பதிவுத் துறையின் சர்வே எண்ணிலோ அல்லது கோயிலின் சொத்துப் பதிவேட்டிலோ இல்லை. கோயிலில் உள்ள சில ஊழியர்கள் தவறான புரிதலால் அமைச்சரிடம் நற்பெயர் வாங்குவதற்காக இவ்வாறு செய்துள்ளனர். ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணைக்கு ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளோம், நீதிமன்றம் ஆதாரங்களின் அடிப்படையில் எடுக்கும் முடிவே இறுதியானது” என்று தெரிவித்தார்.
