திமுகவின் முப்பெரும் விழாவில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய்யை மிகக் கடுமையாக விமர்த்துப் பேசியுள்ளார். தவெக ஆட்சியில் மின்வெட்டும் குற்றங்களுமே அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சட்டமன்ற மாண்பு சீர்கெட்டுள்ளதாகவும், ஊடகங்கள் அரசின் விளம்பர அரசியலையே பெரிதுபடுத்துவதாகவும் சாடினார். மேலும், தவெக அரசு வெறும் “ரீல்ஸ் ஆட்சி” நடத்துவதாகக் கூறிய ஸ்டாலின், நல்லவேளையாகக் கொளத்தூர் மக்கள் தன்னைத் தோற்கடித்ததாகத் தெரிவித்து அவர்களுக்கு நன்றியும் தெரிவித்தார்.
ஸ்டாலினின் இந்த விமர்சனத்திற்குத் தமிழக வெற்றித்துக் கழகம் (தவெக) சமூக வலைதளங்களில் மிகத் தீவிரமாகவும், ‘Gen Z’ ட்ரெண்டிற்கு ஏற்பவும் பதிலடி கொடுத்துள்ளது. முப்பெரும் விழா எனக் கூறிக்கொண்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்வு உண்மையில் ஒரு “ஒப்பாரி விழா” என்று விமர்சித்துள்ள தவெக, பேரறிஞர் அண்ணா பற்றி பேச வேண்டிய மேடையில், முதலமைச்சர் விஜய்யின் நடை, உடை மற்றும் பாவனைகளைப் பற்றியே ஸ்டாலின் அலசியிருப்பதாகக் எள்ளி நகையாடியுள்ளது.
முதலமைச்சரின் ஒவ்வொரு அசைவையும் ஸ்டாலின் வீட்டில் அமர்ந்து ‘நீலாம்பரி’ போல ரீபீட் மோடில் பார்த்து ரசிப்பதாகக் கிண்டலடித்துள்ள தவெக, தேர்தலில் தோற்ற பின்னரும் மூன்று முறை வாக்கு எண்ணிக்கையைச் சரிபார்க்க (revaluation) ஏன் முயன்றார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், மிசா கைது சான்றிதழ் சர்ச்சை, வெளிநாட்டு முதலீடு குறித்த கேள்விகள் மற்றும் தங்களின் தோல்வியால் ஏற்பட்ட பதற்றத்திலேயே ஸ்டாலின் இப்படிப் புலம்பி வருவதாகவும் தவெகவினர் கடுமையாகச் சாடியுள்ளனர்.
ஹாரி பாட்டர் குச்சியுடன் வாக்கிங், இன்ஸ்டா சிறுவர்களுடன் மினி விளாக், வெளிநாட்டுப் பயணங்களில் சைக்கிள் ரைடு எனத் தினமும் ஒரு விளம்பர ‘ஷூட்டிங்’ நடத்தி வந்த ஸ்டாலின், மக்கள் பணிக்காக நடிப்பைத் துறந்து வந்த முதலமைச்சர் விஜய்யைப் பார்த்து “நடிக்கிறார்” என்று கூறுவது உச்சகட்ட நகைமுரண் என்றும் தவெக விமர்சித்துள்ளது. ஆட்சியை இழந்து, மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஸ்டாலின் ரீல்ஸ்களாக வெளியிட்டு ஒப்பாரி வைப்பதாகவும், அவர் அந்த ஏமாற்றத்தில் இருந்து விரைவில் மீண்டு வர வேண்டும் என்றும் தவெக தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.
