ஸ்பாவில் சிக்கிய 5 பெண்கள்… செல்போனை திறந்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கேரளாவை உலுக்கும் ரகசிய நெட்வொர்க்….!

By Nanthini on புரட்டாதி 19, 2026

Spread the love

கேரள மாநிலம் கண்ணூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினரின் அடுத்தடுத்த கைதுகள், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் பாதுகாப்பு கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. கண்ணூர் ரயில் நிலையம் அருகே இயங்கி வந்த ‘மை ஸ்பா ஆயுர்வேதிக் ஹப்’ என்ற மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில், செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லாமல் தங்கியிருந்த 29 வயதான சலீனா அக்தர் என்பவர் முதன்முதலில் கைதானார். தொடர்ந்து, நகரின் மற்றொரு பகுதியில் உள்ள ‘ஆயுஷ் ஸ்பா’வில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் நஸ்மா அக்தர், தஸ்லிமா காத்தூன், மொய்னா காத்தூன் மற்றும் நஸ்ரின் பீபி ஆகிய 4 வங்கதேச பெண்கள் பிடிபட்டனர். வேறு பெயர்களில் வாடகை வீட்டில் தங்கி பணியாற்றி வந்தவர்களின் செல்போன்களை ஆய்வு செய்தபோது, அவர்களது உண்மையான வங்கதேச அடையாள அட்டைகளின் படங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

போலீசாரின் தீவிர விசாரணையில், இவர்களுக்கு பின்னணியில் இயங்கிய மிகப்பெரிய ஆள் கடத்தல் மற்றும் போலி ஆவணச் சங்கிலி அம்பலமாகியுள்ளது. வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் நுழைந்த இவர்கள், மேற்கு வங்கம் மற்றும் கொல்கத்தாவில் இயங்கும் போலி முகமைகள் மூலமாக இந்திய அடையாள சான்றுகளைப் பெற்றுள்ளனர். அங்கிருந்து பெங்களூருவுக்கு அழைத்து வரப்பட்டு, பின்னரே கண்ணூரில் உள்ள பல்வேறு ஸ்பாக்களுக்கு வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். போலி ஆவணங்களை உருவாக்கவே தனியாக ஏஜென்சிகள் செயல்பட்டதும், அவற்றைப் பயன்படுத்தி இவர்கள் வங்கி கணக்குகள் மற்றும் சிம் கார்டுகளைப் பெற்றிருக்கலாம் என்பதும் போலிசாரின் சல்லடை வலை விசாரணையில் தெரியவந்துள்ளது.

   

இந்த விவகாரம் தேசிய அளவில் தீவிரமடைய காரணம், எழிமலாவில் உள்ள மிக முக்கிய பாதுகாப்பு மையமான கடற்படை அகாடமியில் கடந்த ஒரு வருடமாக வேலை பார்த்து வந்த 32 வயதான விப்லவ் சோரன் என்ற மற்றொரு வங்கதேசவாதியும் கைது செய்யப்பட்டதுதான். வெறும் நான்கு நாட்களில் 6 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்ட சம்பவம் மத்திய உளவு அமைப்புகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, கண்ணூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஸ்பாக்கள் மற்றும் வெல்னஸ் மையங்களில் பணியாற்றும் வெளிமாநில ஊழியர்களின் அடையாள ஆவணங்களை உடனடியாகச் சமர்ப்பிக்கக் காவல் துறை அதிரடி உத்தரவிட்டு தீவிர சோதனைகளை நடத்தி வருகிறது.

   

கைது செய்யப்பட்ட பெண்கள் கொல்கத்தா முகவரியைக் காட்டியே வேலைக்குச் சேர்ந்ததாக ஸ்பா உரிமையாளர்கள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டாலும், பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களைக் கொண்டு காவல்துறையினர் அறிவியல் பூர்வமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தனை பேருக்குப் போலி அடையாள அட்டைகளைத் தயாரித்துக் கொடுத்தது யார், பெங்களூருவிலிருந்து இவர்களை ஒருங்கிணைத்து அனுப்பிய முக்கிய நபர்கள் யார் என்பதைக் கண்டறிய விசாரணை வளையம் பிற மாநிலங்களுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம், மாநிலங்கள் கடந்த சட்டவிரோத ஊடுருவல் மற்றும் போலி ஆவண நெட்வொர்க்குகளின் அச்சுறுத்தலை மீண்டும் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.