தமிழக வெற்றித் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகளில் அதிரடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி வரும் புதிய அரசு, அதிக வருவாய் ஈட்டித் தரும் டாஸ்மாக் துறையில் இருந்த முறைகேடுகளைக் களையத் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் எழுந்த புகார்களைத் தொடர்ந்து, டாஸ்மாக் நிர்வாகத்தை முழுமையாகச் சீரமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய்யின் கடுமையான உத்தரவின் பேரில், ஏற்கனவே பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு 500 மீட்டர் சுற்றளவில் செயல்பட்டு வந்த 717 மதுக்கடைகள் உடனடியாக மூடப்பட்டன. இந்த நடவடிக்கை குறிப்பாகப் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனுடன் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்கக் கூடாது என்ற விதியை மிகக் கடுமையாகப் பின்பற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மதுபாட்டிலுக்கு கூடுதலாக ₹10 வசூலிக்கும் ஊழியர்கள் மீதும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறும் உயர் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டதால், தற்போது பெரும்பாலான கடைகளில் கூடுதல் கட்டண வசூல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலும், பள்ளி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலும் இன்னும் சில கடைகள் செயல்பட்டு வருவதாகவும், இதனால் பொது அமைதிக்கும் சட்டம்-ஒழுங்கிற்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இதையேற்று, மக்களுக்கு இடையூறாக உள்ள கடைகள் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு அரசு அறிவுறுத்தியது. அந்த ஆய்வின் முடிவில், தொடர் புகார்களுக்கு உள்ளானவை மற்றும் பேருந்து நிலையங்கள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் உள்ளவை என மேலும் 200 கடைகளில் சிக்கல்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கண்டறியப்பட்டுள்ள அந்த 200 டாஸ்மாக் கடைகளையும் முற்றிலும் மூடவோ அல்லது பொருத்தமான வேறு இடங்களுக்கு மாற்றவோ தமிழக அரசுத் திட்டமிட்டுள்ளது. பொதுமக்களின் சிரமங்களைக் குறைப்பதில் உறுதியாக இருக்கும் முதல்வர் விஜய், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள் டாஸ்மாக் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.
