சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது தங்களுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதாக திமுகவினர் குற்றம்சாட்டினர். குறிப்பாக, சபாநாயகருக்கு வந்த ஒரு துண்டு சீட்டைப் பார்த்த பிறகே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக சட்டசபையில் தர்ணாவில் ஈடுபட்ட திமுகவினர் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இக்குற்றச்சாட்டிற்கு விளக்கமளித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், தான் எந்த துண்டு சீட்டிற்கும் அடிபணிய மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அவையில் சர்க்காரியா கமிஷன் மற்றும் அமலாக்கத்துறை தொடர்பான விவாதங்கள் எந்த ஆண்டு நடைபெற்றது என்பதற்கான குறிப்புகளை சட்டமன்ற அதிகாரிகளிடமிருந்து பெறவே அந்த துண்டு சீட்டு பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்த அவர், சபையை நடத்துவதில் யாருடைய தலையீட்டையும் ஏற்கமாட்டேன் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், புதிய தலைமை செயலகம் பற்றிய விவரங்கள் அரசு அறிவிக்கும் போது மக்கள் மகிழ்ச்சியடைவர் என்றார். மேலும், 4 பேரவை உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்ய எடப்பாடி பழனிசாமி விடுத்த கோரிக்கை குறித்து முதற்கட்ட விசாரணை முடிந்துள்ளதாகவும், அடுத்தகட்ட விரிவான நேரடி விசாரணைக்கான தேதி விரைவில் குறிக்கப்படும் என்றும் கூறினார்.
