மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தந்தை பெரியார் நகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே நேற்று இரவில் வாலிபர் ஒருவர் அருவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்த சிலைமான் போலிஸார் முதற்கட்ட விசாரணை நடத்தினர்.
கொலையின் போது நடந்த சண்டையில் குற்றவாளி ஒருவருக்குக் காயம் ஏற்பட்டதை அறிந்த போலிஸார், அருகிலுள்ள மருத்துவமனைகளில் தீவிரமாகத் தேடி வந்தனர். அப்போது வளையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண்ணில் காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த வேடர் புளியங்குளத்தைச் சேர்ந்த ராஜபாண்டி மற்றும் கப்பலூரைச் சேர்ந்த ராஜேஷ் ஆகிய இருவரை போலிஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.
விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் கொடைக்கானலைச் சேர்ந்த தெய்வேந்திரன் (28) என்பது தெரியவந்தது. இவர் ராஜபாண்டியின் மனைவி பானுப்பிரியாவைச் சந்தித்துவிட்டுத் திரும்பும்போது, அவரைப் பின் தொடர்ந்து வந்த ராஜபாண்டியும் அவரது நண்பர் ராஜேஷும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தெய்வேந்திரனை அருவாளால் கொடூரமாக வெட்டிக் கொன்றுள்ளனர். இக்கொலை சம்பவம் கள்ளத்தொடர்பு காரணமாக நடந்ததா என்ற கோணத்தில் சிலைமான் போலிஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
