மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் அரசு அதிகாரியின் மனிதநேயமற்ற, அதிகார அராஜகத்தைக் காட்டும் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாதா கிராம பஞ்சாயத்து பகுதியில் பணிபுரியும் நில அளவையாளர் நிலேஷ் நம்தேவ் என்ற இளம் அரசு அதிகாரி, அப்பகுதியில் உள்ள சிறிய ஓடையைக் கடக்க முயன்றுள்ளார்.
அப்போது தனது காலணிகளும் ஆடைகளும் நீரில் நனைந்துவிடக் கூடாது என்பதற்காக, அங்கிருந்த லால்பா கேவத் என்ற 65 வயது முதியவரைத் தனது குதிரை போலப் பயன்படுத்தி, அவரது தோள் மீது ஏறிச் சவாரி செய்து ஓடையைக் கடந்துள்ளார். இந்த கொடூர சம்பவத்தை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடவே, அது தீயாகப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்து அதிகார மமதையை நினைவூட்டும் வகையில் அமைந்த இந்தச் செயலால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் திரண்டு புகார் அளித்தனர். முதியவரை இழிவுபடுத்தி, மனிதநேயமின்றி நடந்து கொண்ட அந்த அரசு அதிகாரி மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
