ராஜஸ்தானின் ஜோத்பூர் பகுதியில் அதிவேகமாக வந்த கான்கிரீட் லாரி மோதியதில், மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் உயிரிழந்தார்; அவரது கணவர் காயமடைந்தார். ராம்தேவ்ரா புனிதப் பயணத்தை முடித்துவிட்டு 20-25 பக்தர்கள் கொண்ட குழுவுடன் திரும்பிக் கொண்டிருந்தபோது, வழிமாறி வந்த இடத்தில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்தில் மஞ்ஜேஷ் என்ற பெண் சுமார் 10 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அவரது கணவர் ராம்நிவாஸ் சிறு காயங்களுடன் தப்பினார்.
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன், லாரி டிரைவரையும் சரமாரியாகத் தாக்கினர். அப்போது அங்கிருந்த உதவி ஆய்வாளர் காளுராம் சௌத்ரி டிரைவரை மீட்டு, காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்தார்.
https://twitter.com/HateDetectors/status/2096201678412567014/video/1
இதற்கிடையில், கூட்டத்தில் இருந்த சிலர் லாரிக்கு தீ வைத்தனர். இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கண்டறியும் பணியில் காவல்துறையினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறை, விபத்து மற்றும் தீவைப்புச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
