வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகப் மூத்த பத்திரிகையாளர் சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார். சமீபகாலமாகத் தேசிய அளவில் பிரதமர் வேட்பாளர் ரேஸில் விஜய்யின் பெயர் விவாதிக்கப்பட்டு வருவதாகவும், தென்னிந்தியாவைத் தாண்டி வடகிழக்கு மாநிலங்களிலும் அவருக்கு ஆதரவு அலை உருவாகி வருவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. இதனால் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் பிரியும் சூழல் உருவாகி, அது பாஜகவிற்கே சாதகமாக மாற வாய்ப்புள்ளது எனப் பேசப்படுகிறது.
மத்தியில் மைனாரிட்டி அரசு அமையும் பட்சத்தில், தமிழகத்தில் 40 தொகுதிகளையும் தனித்து நின்று கைப்பற்றினால் தவெக கைகாட்டும் நபரே பிரதமராக முடியும் என்று விஜய் கணக்கு போடுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை விவகாரம் போன்ற காங்கிரஸின் பழைய குற்றச்சாட்டுகளைச் சுமப்பதைத் தவிர்க்கவும், காங்கிரஸ் கூட்டணியை விஜய்யோ அல்லது தவெகவோ இதுவரை அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யவில்லை என்பதாலும் தவெக தனித்து களமிறங்கவே அதிக வாய்ப்புள்ளதாகப் பத்திரிகையாளர் சுவாமிநாதன் பகுப்பாய்வு செய்துள்ளார்.
