தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்து இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் நோக்கில், தமிழக முதல்வர் விஜய் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி பிரிட்டன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். கடந்த மே மாதம் 10-ஆம் தேதி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின், விஜய் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது என்பதால் அரசியல் மற்றும் தொழில் துறையில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டுப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், அதன் அடுத்தகட்டமாக இந்தப் பிரிட்டன் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய்யுடன் தமிழகத் தொழில்துறை உயர் அதிகாரிகளும் பிரிட்டன் செல்லவுள்ளனர். வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி வரை அங்குத் தங்கியிருக்கும் அதிகாரிகள் குழு, முன்னணி சர்வதேச முதலீட்டாளர்களைச் சந்தித்துத் தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கவுள்ளனர். இதற்கிடையே, தைவானில் நடைபெறவுள்ள செமிகான் மாநாட்டில் பங்கேற்று ஏஐ (AI) மற்றும் சிப் தயாரிப்பு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழுவும் தைவான் செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.
