தமிழக வெற்றிக் கழகம் தனது அரசியல் எல்லையைத் தமிழகத்தைத் தாண்டி அண்டை மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக, கேரளா மாநிலத்தில் தவெகவை பலப்படுத்த அக்கட்சியின் தலைவர் விஜய் சிறப்பு திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். சமீபத்தில் பாஜகவிலிருந்து விலகிய பிரபல மலையாள நடிகரும் மூத்த அரசியல்வாதியுமான தேவன், தவெகவில் இணைய உள்ளதாகவும், அவருக்கு கேரள மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. திரையுலகில் விஜய்யுடன் இணைந்து நடித்த அனுபவமும், கேரள அரசியலில் நீண்டகால அனுபவமும் கொண்ட தேவனை முன்னிறுத்துவது, அம்மாநில இளைஞர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களைக் கவரும் என்ற நோக்கில் இத்திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
அதேவேளையில், தவெகவின் இந்த திடீர் நகர்வு கேரள அரசியல் களத்தில், குறிப்பாக ஆளும் காங்கிரஸ் கூட்டணியிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தவெக தொண்டர்கள் விஜய்யை ‘வருங்கால பிரதமர்’ என முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வருவது காங்கிரஸ் தலைமைக்கு அதிருப்தியை அளித்து வரும் நிலையில், காங்கிரஸின் கோட்டையாகக் கருதப்படும் கேரளாவிலேயே தவெக காலூன்ற முயல்வது அக்கட்சிக்கு கூடுதல் தலைவலியை உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டைக் கடந்து தென்னிந்திய அளவில் தவெகவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கினால், அது காங்கிரஸின் பாரம்பரிய வாக்கு வங்கியைப் பாதிக்கும் என்பதால், இந்த விவகாரத்தை காங்கிரஸ் தலைமை தீவிரமாக உற்றுநோக்கி வருகிறது.
