கர்நாடக மாநிலம் செங்காவி கிராமத்தில் வசித்து வந்தவர் லட்சுமி தேவம்மா. கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த இவருக்கும், ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நாகராஜ் என்பவருக்கும் இடையே நெருக்கமான பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், லட்சுமி தேவம்மாவுக்கு 29 வயது மதிக்கத்தக்க மற்றொரு இளைஞருடன் புதிய தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த நாகராஜ், அந்த இளைஞருடனான பழக்கத்தைக் கைவிடும்படி லட்சுமியை எச்சரித்துள்ளார். ஆனால், அவர் அதை ஏற்காமல் புதிய உறவைத் தொடர்ந்ததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானது.
இந்தச் சூழ்நிலையில், தங்களுக்குள் உள்ள பிரச்சினையைப் பேசித் தீர்ப்பதாகக் கூறி லட்சுமியைத் தான் வேலை செய்யும் தோட்டத்திற்கு நாகராஜ் வரவழைத்துள்ளார். அங்கு இருவரும் தனிமையில் இருந்த பிறகு, அந்தப் புதிய இளைஞர் குறித்து மீண்டும் இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த நாகராஜ், அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து லட்சுமியின் தலையில் கொடூரமாகத் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலையை மறைப்பதற்காக, நாகராஜ் அவரது உடலை அதே தோட்டத்தில் மறைவான பகுதிக்குக் கொண்டு சென்று தீயிட்டு எரித்துள்ளார்.
மறுநாள் காலை தோட்டத்திற்கு வந்த உரிமையாளர், அங்கு ஒரு பெண்ணின் உடல் பாதி எரிந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், கொலையாளி நாகராஜைக் கைது செய்தனர். தகாத உறவால் ஏற்பட்ட மோதலில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
