மதுரைத் தமிழக வெற்றிக் கழகத்தில் உட்கட்சிப் பூசல் மற்றும் கோஷ்டி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் மதுரையின் பொறுப்பு அமைச்சராக அறிவிக்கப்பட்ட சிடிஆர் நிர்மல்குமாருக்கும், கட்சியின் மூத்த எம்.எல்.ஏ-க்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டி தவெக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மதுரையில் கட்சி அமைப்பை வலுப்படுத்த ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் வீதம் 8 பேரை கட்சித் தலைமை நியமித்தது. ஆனால், இந்த நடவடிக்கைக்குப் பிறகு உட்கட்சி மோதல்கள் குறையாமல் மேலும் தீவிரமடைந்து வருகின்றன.
இந்த மோதலின் முக்கியக் காரணியாக பொறுப்பு அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாரின் அண்மைக்கால உத்தரவு பார்க்கப்படுகிறது. மதுரையில் எந்தவொரு மாவட்டச் செயலாளர் சார்பாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும் அல்லது போஸ்டர்கள், பேனர்கள் அச்சடிக்கப்பட்டாலும் அதில் பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் தனது புகைப்படம் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று அவர் கெடுபிடி காட்டியுள்ளார். மேலும், கட்சியின் எந்தவொரு செயல்பாடாக இருந்தாலும் தன்னிடம் முன்அனுமதி பெற வேண்டும் என்றும் அவர் கறாராகக் கூறியுள்ளது தவெக மூத்த நிர்வாகிகளையும் தொண்டர்களையும் கொந்தளிக்கச் செய்துள்ளது.
சிடிஆர் நிர்மல்குமாரின் இந்த ஆதிக்கப் போக்குக்கு கட்சியின் மூத்த எம்.எல்.ஏ-க்களான கல்லாணை, தங்கப்பாண்டி மற்றும் மதூர் பதுருதீன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிடிஆர் நிர்மல்குமார் தவெகவில் இணைவதற்கு முன்பிருந்தே, பல ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கத்தில் உழைத்து மதுரையில் கட்சியின் கட்டமைப்பை உருவாக்கியவர்கள் நாங்கள் என்று அவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். தங்களின் அதிகார வட்டத்திற்குள்ளும், உள்ளூர் கட்சிப் பணிகளிலும் சிடிஆர் நிர்மல்குமார் தேவையில்லாமல் தலையிடக் கூடாது என்றும் அவர்கள் கறாராகத் தெரிவித்துவிட்டனர்.
மேலும், மதுரை மாவட்டத்தில் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த கல்லாணை அல்லது தங்கப்பாண்டி ஆகிய இருவரையும் ஓரங்கட்டிவிட்டு சிடிஆர் நிர்மல்குமார் அமைச்சராக நியமிக்கப்பட்டதே இந்த மோதலின் பின்னணியாகக் கருதப்படுகிறது. தற்போது வரை ஓய்வடையாத இந்த உட்கட்சி அதிகாரப் போட்டியையும், பொறுப்பு அமைச்சரின் கெடுபிடிகளையும் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கவனத்திற்குக் கொண்டு சென்று முறையிட கல்லாணை தரப்பு தீவிரமாக முடிவு செய்துள்ளது.
