புது டெல்லியின் தென்மேற்கு பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவி ஒருவர், 2023 டிசம்பரில் சமூக வலைதளம் வாயிலாக அறிமுகமான நபருடன் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் தொலைபேசியில் தொடர்ந்து பேசிய அந்த நபர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவியின் நிர்வாணப் படத்தை உருவாக்கி, அதை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இந்த அச்சுறுத்தலைப் பயன்படுத்தி, படிப்படியாக பணம் கேட்டு வந்த அவர், சுமார் ரூ.1.2 லட்சம் வரை பெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்காமல் இருந்த மாணவி, இறுதியில் காவல்நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். 2025 ஜூலை மாதம் நேரில் சந்தித்தபோதும் அந்த நபர் புகைப்படத்தைக் காட்டி மிரட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பணத்தை வழங்குவதற்காக மாணவி தனது தாயின் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. சிறு சிறு தொகைகளாக பணம் அனுப்பப்பட்ட நிலையில், பின்னர் அவரது தந்தை பரிவர்த்தனைகளை கவனித்து மகளின் நிலை குறித்து அறிந்துள்ளார். இதற்கிடையில், இந்த மாத தொடக்கம் முதல் மாணவியின் தந்தை, மாமா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் அந்த நபர் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது. பணம் கொடுக்காவிட்டால் மாணவி மீது அமிலத் தாக்குதல் நடத்துவதாகவும் அவர் மிரட்டியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது பட்டப்படிப்பு படித்து வரும் மாணவியின் குடும்பம், இந்த தொடர் மிரட்டல்களால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
புகாரின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய டெல்லி போலீசார், உத்தரப் பிரதேசத்தின் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த அஜய் துபே என்பவரை அடையாளம் கண்டு கண்காணித்தனர். அவருக்கு ஏற்கெனவே இரண்டு குற்ற வழக்குகளில் தொடர்பு இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்; 2020-ல் நங்லோய் காவல் நிலையத்திலும், 2019-ல் நிஹால் விஹார் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, நீதிமன்ற விசாரணையில் பங்கேற்க டெல்லி வந்த துபேவை போலீசார் கைது செய்தனர். இதேபோன்று அவர் வேறு பெண்களையும் குறிவைத்து மிரட்டல் அல்லது பணப்பறிப்பில் ஈடுபட்டாரா என்பது குறித்தும் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
