சென்னை திருவேற்காடு அன்னலட்சுமி நகரில் கணவரை இழந்து தனியாக வசித்து வந்தவர் ஹோமாவதி. வளசரவாக்கம் பகுதியில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து வந்த இவர், கடந்த சில நாட்களாக வேலைக்குச் செல்லாமல் இருந்ததோடு வீடும் பூட்டியே கிடந்துள்ளது. இந்நிலையில், அவரது வீட்டிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியதை அடுத்து அக்கம்பக்கத்தினர் திருவேற்காடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, ஹோமாவதி அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். உடனே சடலத்தை மீட்ட காவல்துறையினர், அதனை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் ஹோமாவதி படுகொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, போலீசார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சந்தேகத்தின் பேரில் ஒருவரைப் பிடித்து விசாரித்த போது, மூதாட்டியின் நகைகளைக் கொள்ளையடிப்பதற்காகவே இந்தக் கொலை அரங்கேற்றப்பட்டது என்ற அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது. மேலும், கொலைக்குக் காரணமான அவனது கூட்டாளி திருடப்பட்ட நகைகளுடன் தப்பியோடிவிட்ட நிலையில், அவரை காவல்துறையினர் தற்போது தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
