திராவிட முன்னேற்றக் கழகத்தில் அமைப்பின் கட்டமைப்பு மற்றும் தேர்தல் பணிகளில் ‘மாவட்டச் செயலாளர்’ பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைக் காட்டிலும் அதிக உட்கட்சி அதிகாரமும் பொறுப்புகளும் கொண்ட ஒன்றாக இப்பதவி பார்க்கப்படுகிறது.
மாவட்டச் செயலாளர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர், பாசன வசதி, உட்கட்டமைப்பு போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து, அவற்றை கட்சித் தலைமையின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் இணைப்புப் பாலமாகச் செயல்படுகின்றனர்.மேலும், கட்சி நிர்வாகிகளை நெறிப்படுத்துவது, தொண்டர்களை ஒருங்கிணைப்பது, புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது மற்றும் தேர்தல் காலத்தில் முக்கிய வியூகங்களை வகுத்துச் செயல்படுத்துவது ஆகியவை இவர்களின் பிரதான கடமையாகும்.
சமீபத்தில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில், உட்கட்சிப் பதவிகளுக்கான வயது வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டு, மாவட்டச் செயலாளர் பதவிக்கு அதிகபட்சமாக 70 வயது எனவும், ஒருவர் அதிகபட்சமாக 3 முறை மட்டுமே ஒரே பதவியில் நீடிக்க முடியும் எனவும் புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
