மகாராஷ்டிர மாநிலம் நளஸோபரா பகுதியைச் சேர்ந்த பிங்கி பாண்டே என்ற பெண், சிலர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டு தாக்கியதாகப் புகார் அளிக்கக் காவல் நிலையம் சென்றுள்ளார். ஆரம்பத்தில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்ய மறுத்த நிலையில், பெண்கள் ஆணையத்தின் தலையீட்டிற்குப் பிறகே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பின்னர், வழக்கை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு காவல் நிலைய அதிகாரி வற்புறுத்தியதாகவும், அதற்குப் பிங்கி பாண்டே மறுத்ததால் காவல் நிலையத்திற்குள்ளேயே வைத்து போலீசார் அவரை லத்தியால் கொடூரமாகத் தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதில் இடுப்பு மற்றும் முகத்தில் பலத்த காயமடைந்த அவர், நடக்கக்கூட முடியாமல் அவதியுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை வீடியோ எடுக்க முயன்ற போது அவரது மொபைல் போனையும் போலீசார் பிடுங்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இரண்டு குழந்தைகளின் தாயான அப்பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக நீதி வழங்கி சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
