“மனைவியை விடுங்க… என் மகளை நான்தான் கொன்றேன்…” ரகசிய திருமணத்தால் அரங்கேறிய ஆணவ கொலை…. 4 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த நீதி…. பரபரப்பு பின்னணி…!!!

By Devi Ramu on ஆவணி 20, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆயுஷி யாதவ் (22) படுகொலை வழக்கில், அவரது தாய் மற்றும் தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லியில் உள்ள தனது வீட்டில் வைத்து ஆயுஷியை அவரது தந்தை நிதேஷ் யாதவ் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். ராஜஸ்தானைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை ஆயுஷி பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டதே இக்கொலைக்குக் காரணமாக அமைந்தது.

கொலையை மறைக்க, ஆயுஷியின் தாய் பிரஜ்வாலாவின் உதவியோடு உடலைச் சிவப்பு நிறச் சூட்கேஸில் அடைத்து, 150 கி.மீ தொலைவில் உள்ள மதுரா யமுனா எக்ஸ்பிரஸ் வே பகுதியில் வீசிச் சென்றனர். வழக்கின் விசாரணையில் இருவரையும் போலீஸார் கைது செய்த நிலையில், “நான் தான் எனது மகளைக் கொன்றேன், என் மனைவி மீது தவறு இல்லை” எனத் தந்தை நீதிமன்றத்தில் தெரிவித்தார். எனினும், பெற்ற மகளையே கொடூரமாகக் கொன்ற செயல் மன்னிக்க முடியாத குற்றப் பின்னணி கொண்டது என்றும், இதில் இரக்கம் காட்டினால் சமூகத்திற்குத் தவறான செய்தி சென்றுவிடும் என்றும் கூறிய நீதிபதி, பெற்றோர் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.