சென்னைக்கு வருகை தந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்காததற்கு எஸ்.பி.வேலுமணி தொடர்பான விவகாரமே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்புக்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு அமித்ஷா தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியவரிடம், அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் குறித்துப் பேசக்கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி மிகவும் பிடிவாதமாக இருந்ததாகத் தெரிகிறது.
இதன் காரணமாகவே இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்புத் திட்டம் கைவிடப்பட்டதாகக் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டி.டி.வி. தினகரன் ஆகியோரும் அமித்ஷாவைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அந்தச் சந்திப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
