தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளதுடன், அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். எதிர்பாராத இந்தத் தோல்வியால் 74 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றிய திமுக எதிர்க்கட்சி வரிசைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுச் செயல்பட்டு வருகிறார்.
சட்டமன்றத்தில் தவெக சார்பில் தேர்வாகியுள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் முதன்முறை சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பதால், அவர்களைத் தங்கள் அனுபவத்தைக் கொண்டு எளிதில் எதிர்கொள்ளலாம் எனத் திமுக கருதுகிறது. இதனால், தவெக அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அவையில் முன்வைக்கும் போதெல்லாம், மூத்த திமுக உறுப்பினர்கள் எழுந்து கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். அவையின் அனுபவமிக்க உறுப்பினர்கள் பலரைக் கொண்டுள்ள எதிர்க்கட்சி வரிசை, புதிய அமைச்சர்களின் உரைகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் காரசாரமான விவாதங்களை எழுப்பி வருகிறது.
இந்நிலையில், இன்றைய அவைகூடலின் போது இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றியது. திமுக உறுப்பினர்களின் இந்த அணுகுமுறையால் கோபமடைந்த அமைச்சர் ராஜ்மோகன் அவையில் கொந்தளித்தார். ” எங்களை நெறிப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் எங்கள் முதல்வரின் ஒரே ஒரு பார்வை போதும்; ஆனால் திமுக உறுப்பினர்கள் அடிக்கப் பாய்வது போல் நடந்து கொள்கிறார்கள். திமுக உறுப்பினர் உடுமலை ஜெயக்குமார் கையை ஓங்கிக்கொண்டு பாய்வதும், தவெக அமைச்சர்களை ஒருமையில் பேசுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என அவையில் தனது வலுவான கண்டனத்தைப் பதிவு செய்தார்.
